வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை


வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 Aug 2021 10:23 AM IST (Updated: 2 Aug 2021 10:23 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ரவுடி
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(வயது 21). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், வில்லிவாக்கத்தில் கருணாகரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.இந்த கொலை வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அலெக்ஸ், தனது உயிருக்கு ஆபத்து என கருதி பெங்களூருவில் வசித்து வந்தார். இதற்கிடையில் வழக்கு ஒன்றில் கோர்ட்டில் வாய்தா வருவதால் சென்னைக்கு வந்தார்.

வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே அலெக்ஸ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதில் படுகாயம் அடைந்த அலெக்ஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழியா?
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆடு சரவணன், ரஞ்சித் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர். அவர்கள் சிக்கினால்தான் அலெக்ஸ் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

கருணாகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story