கம்பம் ஒன்றிய அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் தர்ணா
சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியை தகுதிநீக்கம் செய்யக்கோரி கம்பம் ஒன்றிய அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான அறிவழகன், சாந்தி, ராதிகா, சுதா, முத்துக்குமார் உள்பட 10 பேர் நேற்று கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஊராட்சி நிர்வாகத்தில் தலையீட்டு வருவதாகவும், அதற்கு உடந்தையாக ஊராட்சி செயலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
எனவே ஊராட்சி தலைவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவரது கணவர் மற்றும் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கலெக்டரிடம் இதுதொடர்பாக எடுத்துரைத்து, ஒருவார காலத்திற்குள் ஊராட்சி தலைவி, அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story