தேனி, கம்பத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் போராட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி, கம்பத்தில் போராட்டம் நடத்தினர்.
தேனி:
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி, கம்பத்தில் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகத்தில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன்பின்னர் இடஒதுக்கீடு மறுவரையறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில தலைவர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்தும், தற்போதைய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் மாநில தலைவர் அன்பழகன் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்தில் கோஷமிட்டார். திடீரென்று அவர் தனது வேட்டியை கழட்டி விட்டு கோவணம் கட்டிய நிலையில் கோஷமிட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் வேட்டி கட்டிக்கொண்டார்.
அதன்பிறகு சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை
இதேபோல் கம்பத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி முற்றுகையிட்டனர். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 10.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில், கம்பம் நகர செயலாளர் காளீஸ்வரன், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் கவுதம், நகர தலைவர் விருமாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story