கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்
x
தினத்தந்தி 2 Aug 2021 10:26 PM IST (Updated: 2 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மெக்கானிக், அ.தி.மு.க.பிரமுகர் மீது புகார் தெரிவித்தார்.

கடலூர், 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கோரிக்கைகளுடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் புகார் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு விட்டு செல்கின்றனர். அதன்படி நேற்றும் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை போட்டனர். முக்கிய பிரச்சினைகள் என்றால் மட்டும் ஒரு சில நபர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பி வைத்தனர்.

தீக்குளிக்க முயற்சி

அதன்படி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 54 வயது மதிக்கத்தக்க ஒருவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு தான் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார், அவரை தடுத்து அவர் உடலில் தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, அவர் கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமிநகரை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் லட்சுமி நாராயணன் (வயது 54) என்று தெரிந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நிலத்தகராறு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில், அந்த இடத்தை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார்.

பரபரப்பு

இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் கலெக்டர் அலுவலக பெட்டியிலும் மனு போட்டு விட்டேன். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் வேறுவழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். போலீசார் தடுத்து விட்டனர் என்றார்.
தொடர்ந்து அவரை கடலூர் புதுநகர் போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story