ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஊட்டி வருகை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்கிழமை) ஊட்டி வருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்கிழமை) ஊட்டி வருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை(புதன்கிழமை) கலந்துரையாடி பேசுகிறார். இதற்காக அவர் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.40 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார்.
ஊட்டி ஹெலிகாப்டர் தளத்தில் மதியம் 12.15 மணிக்கு வந்து இறங்குகிறார். பின்னர் சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார். நாளை ராணுவ நிகழ்ச்சியை முடித்துவிட்டு 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். 6-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், ஊட்டி ராஜ்பவனுக்கு வருகிறார்.
5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
இதனால் ஊட்டியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் கொண்ட 18 குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ராஜ்பவன், தாவரவியல் பூங்கா, ஜனாதிபதி செல்லும் இடங்களில் சோதனை நடத்தினர். ஊட்டி, வெலிங்டனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு வாகன ஒத்திகை
ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக ராஜ்பவனுக்கு ஜனாதிபதி வருவதால் நேற்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடத்தப்பட்டது. தீட்டுக்கல் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக ராஜ்பவனுக்கும், பின்னர் அங்கிருந்து சேரிங்கிராஸ் வழியாக குன்னூர் வெலிங்டனுக்கும், அங்கிருந்து ஊட்டி ராஜ்பவனுக்கும் பாதுகாப்பு வாகன ஒத்திகை நடந்தது.
அப்போது சந்திப்பு பகுதிகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊட்டி ராஜ்பவனில் 2 நுழைவாயில்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊட்டி ராஜ்பவனில் ஜனாதிபதி 3 நாட்கள் தங்குவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ராஜ்பவன் உள்குதி மற்றும் வெளிப்பகுதி நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
பேட்டரி கார்கள்
இதற்கிடையில் 5-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை ஜனாதிபதி சுற்றி பார்க்க உள்ளதாக தெரிகிறது. இயற்கை எழில் மிகுந்த தாவரவியல் பூங்காவை ஜனாதிபதி கண்டு ரசிப்பதற்காக கோவையில் இருந்து 2 பேட்டரி கார்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒன்று பூங்காவிலும், மற்றொன்று ராஜ்பவனிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
அதில் 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த காரில் 6 பேர் அமர்ந்து செல்லலாம். எளிதாக இயக்கும் வசதி உள்ளது. ஜனாதிபதி சுற்றி பார்ப்பதற்காக பேட்டரி கார்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை நடைபயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story