பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது
கோவையில் பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 450 பேர் பங்கேற்றனர்.
கோவை
கோவையில் பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இதில் 450 பேர் பங்கேற்றனர்.
உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக உடல் தகுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரேனா பரவல் குறைந்து வருவதால் உடற்தகுதி தேர்வு கடந்த வாரம் கோவையில் அவினாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி மைதானத்தில் தொடங்கியது.
இதில் ஆண் காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடந்தன.
400 மீட்டர் ஓட்டம்
அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கானஉடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக 500 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு இருந்தது. இதற்கு 450 பேர் வந்திருந்தனர்.
காலை 6 மணியளவில் மைதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீசார் சமூக இடைவெளி விட்டு அமர வைத்தனர்.
அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. தொடர்ந்து உயரம் சரிபார்க்கப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் தகுதிக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
டி.ஐ.ஜி. பார்வையிட்டார்
கொரோனா பரவல் காரணமாக ஓட்டப்பந்தயத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் முதல் 20 பேர் வரை மட்டுமே ஓட அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக உடல் தகுதி தேர்வில் பங்கேற்க வந்த அனைவரும் கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த உடல்தகுதி தேர்வை கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story