குண்டும் குழியுமான வால்பாறை முடீஸ் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான வால்பாறை முடீஸ் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
குண்டும், குழியுமான வால்பாறை முடீஸ் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு சாலை உள்ளது. இதில், சோலையார் எஸ்டேட் பகுதியில் இருந்து தோனிமுடி எஸ்டேட் வரை உள்ள 9 கி.மீட்டர் சாலை தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமானது.
இந்த சாலையை தனியார் எஸ்டேட் நிர்வாகம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி, வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனைத்தொடர்ந்து சாலைகளை சீரமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டு, சாலையை பெயர்ந்து எடுக்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாலையை சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னரும் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் மேலும் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வால்பாறை முடீஸ் சாலை குண்டும், குழியுமான மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை மேலும் மோசமாகி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்கு கூட நோயாளிகளை அழைத்து செல்ல மிகவும் சீரமமாக உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
சாலையை பராமரிப்பு பணியை தொடங்காவிட்டால் எஸ்டேட் தொழிலாளர்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story