வாணியம்பாடி அருகே வாட்ஸ் அப் மூலம் மணல் திருட்டு


வாணியம்பாடி அருகே வாட்ஸ் அப் மூலம் மணல் திருட்டு
x
தினத்தந்தி 2 Aug 2021 11:35 PM IST (Updated: 2 Aug 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே வாட்ஸ் அப் மூலம் மணல் திருட்டு மற்றும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி

மணல் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை முற்றிலுமாகத் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் மணல் கொள்ளையர்களை பிடிக்க  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பகல் நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற நோக்கத்தில் இரவு முழுவதும் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.

அதிலும் தற்போது வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதன் மூலம் திருட்டு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. வாணியம்பாடி நகரப் பகுதிகளிலும், அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், கொடையாஞ்சி பகுதிகளிலும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். 

டோர் டெலிவரி

மணல் வேண்டுவோர் இந்த குழுவில் தங்கள் இருப்பிடம் குறித்து விவரங்கள் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. ஒரு சிமெண்டு மூட்டை அளவு மணல் ரூ.100-க்கும், ஒரு மாட்டுவண்டி மணல் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டிப்பர் லாரி, டிராக்டர் மூலமாகவும் மணல் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. 

மணல் கடத்தலை தடுக்க காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story