திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 3 Aug 2021 1:01 AM IST (Updated: 3 Aug 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ரூபா கீதாராணி மற்றும் போலீசார் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்தனர்.
பின்னர் மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். பொறியாளர் அறை, உதவி பொறியாளர்கள் அறை உள்பட 3 அறைகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர்.
3 மணி நேரம் சோதனை
அப்போது அலுவலகத்தில் இருந்த பீரோக்கள், மேஜைகளை திறந்து சோதனையிட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் அதிகாரிகள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை, என்றனர். இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story