குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கலைக்கூத்தாடிகள்


குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கலைக்கூத்தாடிகள்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:10 AM IST (Updated: 3 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

கீழமாத்தூரில் கலைக்கூத்தாடிகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

குன்னம்:

கலைக்கூத்தாடிகள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் ஊராட்சி அழகிரிபாளையத்தில் கலைக்கூத்தாடிகள் வசித்து வருகின்றனர். அங்கு கலைக்கூத்தாடிகளின் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகமாகவே, சில குடும்பங்கள் தனியாக பிரிந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுக் கொட்டகை பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை தனியாரிடம் வாங்கி, அங்கு குடிசைகள் அமைத்து, அப்பகுதிக்கு துர்க்கை அம்மன் நகர் என்று பெயரிட்டு குடியிருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சுமார் 25 குடும்பங்களில் 100 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 3 மாணவர்கள் கல்லூரிகளிலும், 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் படித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஊர், ஊராக சென்று கலைக்கூத்தாடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கலைக்கூத்தாட முடியாத சூழ்நிலையில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் துர்க்கை அம்மன் நகரில் அடிப்படை வசதியான தெருவிளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று, சுடுகாட்டில் ஈமக்கிரியை செய்யும் இடத்தில் குளிப்பதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அதனை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல.
மின்விளக்குகள் பழுது
குடியிருப்பு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட 3 சூரியசக்தி மின்விளக்குகள், சில மாதங்களிலேயே பழுதடைந்து விட்டன. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குடியிருக்கும் குடிசை வீடுகளுக்கு வீட்டு வரி செலுத்தி ரசீதும் பெற்றுள்ளனர். ஆனால் ஊராட்சி சார்பில் இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இது குறித்து கலைக்கூத்தாடிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இப்பகுதியில் மின் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக காடா விளக்கு போன்ற விளக்குகளை பயன்படுத்துகின்றனர். அவற்றின் மூலம் கிடைக்கும் குறைந்த வெளிச்சத்தில் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமமடைகின்றனர். மேலும் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் நிலையில், செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றால், அருகே உள்ள பகுதிக்கு சென்று அங்குள்ள டீக்கடையில் சார்ஜ் போட வேண்டிய நிலை உள்ளது.
கோரிக்கை
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மற்றவர்களை மகிழ்வித்து வரும் எங்களது (கலைக்கூத்தாடிகள்) வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறோம். எனவே குடியிருப்பு பகுதியில் அரசு வீடு கட்டித்தர வேண்டும். தெருவிளக்கு மற்றும் மின் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story