ஒரு நாளைக்கு 25 முறை மூடப்படும் ரெயில்வே கேட்: மல்லூாில் மேம்பாலம் அமைக்கக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம்-போலீசார் பேச்சுவார்த்தை


ஒரு நாளைக்கு 25 முறை மூடப்படும் ரெயில்வே கேட்: மல்லூாில் மேம்பாலம் அமைக்கக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம்-போலீசார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 3 Aug 2021 3:54 AM IST (Updated: 3 Aug 2021 3:54 AM IST)
t-max-icont-min-icon

ஒரு நாளைக்கு 25 முறை ரெயில்வே கேட் மூடப்படுகிறது. எனவே மல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பனமரத்துப்பட்டி:
ஒரு நாளைக்கு 25 முறை ரெயில்வே கேட் மூடப்படுகிறது. எனவே மல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
10 கிராம மக்கள்
மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் சேலம்- கரூர் அகல ெரயில் பாதை செல்கிறது. இந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்துதான், வேங்காம்பட்டி, வாழக்குட்டப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடி, மூக்குத்திப்பாளையம், கொமாரபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லூர் பஸ் நிலையத்துக்கு வர வேண்டும்.
அங்கிருந்துதான் சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்றுவர வேண்டும். மேலும் பனமரத்துப்பட்டி, மல்லூர் பகுதிகளில் இருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி பகுதிகளுக்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.
அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்
இந்த பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்வதும், கடந்து வருவதுமாக உள்ளனர். இந்த ரெயில்வே பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் ஒரு நாளைக்கு பலமுறை சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் ரெயில்வே கேட் ஒரு நாளைக்கு 25-க்கும் மேற்பட்ட தடவை மூடப்படுகிறது. எனவே இந்த பகுதி மக்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேம்பாலம் அமைக்க கோரிக்கை
அதிலும் காலை, மாலை நேரங்களிலும், ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனம் செல்லும் போதும் இந்த கேட்டை கடந்து செல்ல மக்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.
எனவே இந்த பகுதி மக்கள் இணைந்து மல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போராட்டம்
எனவே மல்லூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று மல்லூர் தபால் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் போது காவிரியின் குறுக்கே மேகதாது தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் மல்லூர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருளானந்த், ஊராட்சி தலைவர்கள் கனிமொழி (வாழக்குட்டப்பட்டி), ராஜாஆதவன் (பொன்பரப்பிபட்டி) மற்றும் 10 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட போவதாக தகவல் பரவியது. கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரபாணி, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகலா ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் கூறினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story