சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் வழக்கை டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் வழக்கை டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2021 12:33 PM GMT (Updated: 3 Aug 2021 12:33 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கை வருகிற டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் கோர்ட்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையை கண்காணித்து வருகிறது. போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கில் மொத்தம் 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. 72 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

அரசு அனுமதி

அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘சிறப்பு டி.ஜி.பி., மற்றும் புகார் கொடுக்க சென்னை வந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை வழிமறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி., உள்துறை கூடுதல் செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அரசு அனுமதியளித்துள்ளது’’ என்று கூறினார்.

தினந்தோறும் விசாரணை

இதையடுத்து நீதிபதி, ‘‘பாலியல் தொந்தரவு வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து வரும் டிசம்பர் 20-ந்-தேதிக்குள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும். கால அவகாசம் மேலும் தேவைப்பட்டால், ஐகோர்ட்டை அவர் அணுகலாம். இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை டிசம்பர் 23-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

Next Story