மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளையான போலீஸ்காரர் பலி தலை ஆடியை கொண்டாட மாமனார் வீட்டுக்கு சென்றபோது பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளையான போலீஸ்காரர் பலி தலை ஆடியை கொண்டாட மாமனார் வீட்டுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 3 Aug 2021 8:36 PM IST (Updated: 3 Aug 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

மகேந்திரமங்கலம் அருகே தலை ஆடியை கொண்டாட மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் மோதி புதுமாப்பிள்ளையான போலீஸ்காரர் பலியானார்.

பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே தலை ஆடியை கொண்டாட மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் மோதி புதுமாப்பிள்ளையான போலீஸ்காரர் பலியானார்.
போலீஸ்காரர்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பனைகானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் புகழேந்தி (வயது 28). இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 
இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அத்துகானஅள்ளியை சேர்ந்த நாகராஜ் மகள் கவுதமி (23) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில வாரத்தில் புகழேந்தி, மனைவி கவுதமியை மாமனார் வீட்டில் விட்டு விட்டு பணிக்கு சென்றார். 
இதனிடையே தலை ஆடியை கொண்டாட நேற்று முன்தினம் புகழேந்தி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இரவு அவர் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பஸ் மோதி பலி
பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் புகழேந்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று போலீஸ்காரர் புகழேந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சோகம்
விபத்தில் புதுமாப்பிள்ளை இறந்த தகவல் அறிந்ததும் கவுதமி மற்றும் இருவீட்டு பெற்றோர், உறவினர்கள் விரைந்து வந்து புகழேந்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். 
தலை ஆடியை கொண்டாட மாமனார் வீட்டுக்கு சென்ற புதுமாப்பிள்ளையான போலீஸ்காரர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
----

Next Story