மனைவியை நம்ப வைக்க போலீஸ் உதவி கமிஷனராக நாடகமாடினேன்; கைதான பட்டதாரி பரபரப்பு வாக்குமூலம்
குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மனைவியை நம்ப வைப்பதற்காக, போலி போலீஸ் உதவி கமிஷனராக நாடகமாடினேன் என்று கைதான பட்டதாரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பட்டிவீரன்பட்டி:
குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மனைவியை நம்ப வைப்பதற்காக, போலி போலீஸ் உதவி கமிஷனராக நாடகமாடினேன் என்று கைதான பட்டதாரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலி உதவி கமிஷனர்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி பகுதியில், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ‘சைரன்’ பொருத்திய, காவல் என்று எழுதப்பட்டிருந்த ஜீப் ஒன்று வேகமாக வந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த ஜீப்பை நிறுத்தி, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என்று கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் அவர் காண்பித்தார்.
அது, போலியானது என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரை, பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு தகவல்
விசாரணையில் அவர், சென்னை கொளத்தூர் ஜீவாநகரை சேர்ந்த விஜயன் (வயது 42) என்று தெரியவந்தது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ள இவர், தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என கூறி வலம் வந்துள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து போலீஸ் உதவி கமிஷனர் என்பதற்கான போலி அடையாள போலி அட்டை, துப்பாக்கி, சீருடை, ஜீப் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து விஜயனை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் பிடிபட்ட விஜயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். அவருடைய மனைவி கொளத்தூரில் மழலையருக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.
குரூப்-1 தேர்வு
லாரி தொழிலில் விஜயனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் விஜயனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்களில் விஜயன் வேலை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.
இதற்கிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜயன் தனது மனைவியிடம், தான் குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் உதவி கமிஷனராக பதவியேற்றுள்ளதாக கூறினார். மேலும் தனது மனைவியை நம்ப வைப்பதற்காக, போலீஸ் உதவி கமிஷனராக நடிக்க முடிவு செய்தார்.
விசாரணை என்ற பெயரில்...
இதற்காக அவர், கோவையில் உள்ள தனது நண்பரான ஜெயமீனாட்சி என்பவரது பெயரில் ஜீப் ஒன்றை வாங்கினார். பின்னர் அந்த ஜீப்பை ரூ.2 லட்சம் செலவில் போலீஸ் வாகனம் போன்று மாற்றினார்.
இதைத்தொடர்ந்து அந்த ஜீப்பை எடுத்துக்கொண்டு அடிக்கடி விசாரணைக்காக வெளியே செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியூர் சென்று விடுவார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து 10 நாட்கள் ஓய்வு எடுப்பார்.
அதன்பிறகு மீண்டும் விசாரணை என்ற பெயரில், பல ஊர்களுக்கு சென்றுவிடுவார். இவ்வாறு தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என்று மனைவியை நம்ப வைத்துள்ளார்.
அந்த வகையில் தான், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தேனி நோக்கி ஜீப்பில் அவர் வந்துள்ளார். அப்போது தான் விஜயன், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் சிக்கியிருக்கிறார்.
இதற்கிடையே போலீஸ் அதிகாரி என்ற பெயரில் யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா? என்று தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story