கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது


கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 10:03 PM IST (Updated: 3 Aug 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி: 

தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். 


அப்போது அதற்குள் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை அவர்கள் கடத்தி வந்ததாக தெரியவந்தது. ஆனால், எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? என்ற விவரங்களை அவர்கள் தெரிவிக்காமல் முன்னுக்கு பின்முரணாக தகவல்களை தெரிவித்து போலீசாரை குழப்பியுள்ளனர். 

விசாரணையில் அவர்கள், கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பாஸ்கரன் (வயது 20), திருஞானம் மகன் தினேஷ் (20), வேல்முருகன் மகன் விக்னேஷ் (19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். 

நேற்று அவர்களை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story