ஆடி கிருத்திகையையொட்டி வேண்டுதலை நிறைவேற்ற ராட்சத கிரேனில் அலகு குத்தி சென்றபோது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த பக்தர்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


ஆடி கிருத்திகையையொட்டி வேண்டுதலை நிறைவேற்ற ராட்சத  கிரேனில் அலகு குத்தி சென்றபோது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த பக்தர்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 3 Aug 2021 10:28 PM IST (Updated: 3 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே ஆடி கிருத்திகையையொட்டி வேண்டுதலை நிறைவேற்ற ராட்சத கிரேனில் அலகு குத்தி சென்ற பக்தர் 40 அடி உயரத்தில் இருந்து கீழேவிழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

குருபரப்பள்ளி:
ஆடி கிருத்திகை விழா 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட அரசு தடை விதித்திருந்தது. கோவில்களில் சாமிக்கு பூஜை செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 
ஆனால், நேற்று முன்தினம் ஆடி கிருத்திகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் வழக்கம்போல் காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். மேலும் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். 
கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளியை அடுத்த எட்றப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. 
கிரேனில் இருந்து விழுந்தார் 
இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 36) உள்பட அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர், நேர்த்திக்கடன் செலுத்த ராட்சத கிரேனில், முதுகில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். 
மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆகாஷ் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே கிரேனில் இருந்து விழுந்த ஆகாஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து மற்ற 3 பேரும் கீழே இறங்கி, நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story