கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை-மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வருகிறார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நாளை (வியாழக்கிழமை) அவர் தொடங்கி வைக்கிறார்.
ஓசூர்:
மக்களை தேடி மருத்துவம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தொடங்கிவைக்கிறார். இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் ஓசூர் புறப்படுகிறார். மாலை 5.25 மணிக்கு அவர் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து 5.30 மணிக்கு காரில் சென்று ஓசூரில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலை வந்தடைகிறார். இரவில் ஓசூரில் தங்குகிறார்.
திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
நாளை காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து அவர் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து சூளகிரியில் இருந்து காரில் புறப்பட்டு ஓசூர் விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து 11.40 மணி அளவில் விமானத்தில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.
ஆய்வு
இதனிடையே ஓசூரில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு மேடை அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி முத்துக்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா, மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஓசூர் மாநகர முன்னாள் செயலாளர் மாதேஷ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story