கூடலூர் அருகே சேறும் சகதியுமாக கிடக்கும் முன்டக்குன்னு சாலை

கூடலூர் அருகே உள்ள முன்டக்குன்னு சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே உள்ள முன்டக்குன்னு சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தார்சாலை வசதி இல்லை
கூடலூர் தாலுகா பாண்டியாறு குடோனில் இருந்து தேவாலா அட்டிக்கு தார் சாலை செல்கிறது. இப்பகுதியில் பல குக்கிராமங்கள் உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இச்சாலையின் வலது புறத்தில் முன்டக்குன்னு கிராமத்துக்கு மண் சாலை செல்கிறது. இங்கே ஏராளமான ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மண் பாதையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நோயாளிகள், கர்ப்பிணிகளை அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதில்லை. இதனால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு தொட்டில் கட்டி சுமந்து செல்லும் நிலை உள்ளது.
சேறும் சகதியுமாக
இதனால் தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் முன்டக்குன்னு சாலை சேறும், சகதியுமாக சாலை காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வழுக்கி விழுந்து காயமடையும் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாண்டியாறு குடோனில் இருந்து தேவாலா அட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து கிராமத்துக்கு இணைப்பு சாலை செல்கிறது. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. கிராமத்துக்கு செல்லும் ஆற்று வாய்க்காலை கடந்து செல்வதற்கு சிமெண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை தார்சாலை மட்டும் அமைத்து தருவது இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






