பூம்புகார் சங்கம துறையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
கொரோனா ஊரடங்கால் புதிய கட்டுப்பாடு காரணமாக பூம்புகார் சங்கம துறையில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. மயிலாடுதுறை துலாகட்டத்தில் தடையை மீறி பொதுமக்கள் கொண்டாடினர்.
திருவெண்காடு:
கொரோனா ஊரடங்கால் புதிய கட்டுப்பாடு காரணமாக பூம்புகார் சங்கம துறையில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. மயிலாடுதுறை துலாகட்டத்தில் தடையை மீறி பொதுமக்கள் கொண்டாடினர்.
ஆடிப்பெருக்கு விழா
காவிரி நதியை போற்றும் விதமாகவும், நன்றி சொல்லும் விதமாகவும் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா காவிரி பாயும் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆறுகள், கடற்கரை பகுதியில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
மேலும் கடற்கரை மற்றும் காவிரி ஆறு பகுதிகளில் கூட்டம் கூட கூடாது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டு இருந்தார். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பூம்புகார் காவிரி கடலோடு கலக்கும் சங்கம துறையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுமண தம்பதிகள் இங்கு வந்து வழிபாடு நடத்தி, புதிய தாலி அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு பணியில்
ஆனால் நேற்று தடை உத்தரவு காரணமாக பூம்புகார் கடற்கரை மற்றும் காவிரி சங்கமதுறை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று ஆடிப்பெருக்கு விழாவைெயாட்டி பூம்புகார் நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரவேல், சேகர், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோல் கடற்கரை பகுதியில் பூம்புகார் கடற்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை தலைமையில் போலீசார் கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் தலைமையில் வருவாய்த்துறையினர் தர்மகுளம் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை குறித்து தெரியாமல் கார்களில் வருகைதந்த பொது மக்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
மயிலாடுதுறையில்
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் கொேரானா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 2-வது அலையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் பரவல் அதிகமாகி பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் திருவிழாக்கள் மற்றும் மதவழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
குறிப்பாக ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஆடி கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட தடைவிதித்ததோடு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களிலும் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு விழா
இந்த நிலையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று தடையைமீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் காதோலை, கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி நீராடினர்.
மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளின் போது அணிந்து இருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காலம்காலமாக கொண்டாடி வரும் இந்த மரபுவழியை பின்பற்றி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
கலாசார பண்டிகையான இந்த ஆடிப்பெருக்கை பொதுமக்கள் உணர்ச்சி பெருக்குடன் கொண்டாடியதால் போலீசார் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தை தடை செய்ய மனமில்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர்
ஆடிப்பெருக்கையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story