காரைக்குடி,
திண்டுக்கல் அருகே சிறு நத்தம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 42).வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், காரைக்குடியிலுள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சிறு நத்தத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார். மனைவியை பார்த்து விட்டு மீண்டும் சிறு நத்தத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். குன்றக்குடி கோட்டை காளியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் தியாகராஜன் பலத்த காயமடைந்து இறந்தார்.. இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி காரைக்குடியை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்றது.வழக்கை அரசு வக்கீல் செல்வராஜ் நடத்தினார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாலமுருகன், குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகரனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.