நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2021 12:48 AM IST (Updated: 4 Aug 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே வண்ணான்குடிகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை அங்கு ஏற்கனவே இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர்.
 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் ஏராளமான நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகியுள்ளன. 

நஷ்டம்

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வண்ணான்குடிகாடு பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. 
ஆனால் ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் 480 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை கொள்முதல் செய்த பின்னர்தான், வண்ணான்குடிகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகளின் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்பதால், அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 இந்த நிலையில் ஆத்திரமடைந்த வண்ணான்குடிகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமையில் ஒன்று திரண்டு அங்கிருந்த நெல் தூற்றும் எந்திரத்திற்கு மலர் மாலை அணிவித்து, சூடம் ஏற்றி இறுதி சடங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

 அப்போது அவர்கள், எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நெரடி நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.  தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில் ஓரிரு நாட்களுக்குள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் தாங்கள் அறுவடை செய்த அனைத்து நெல் மணிகளையும்  சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story