வங்கிகளில் தனிநபர், நகைக்கடன் அதிகரிப்பு


வங்கிகளில் தனிநபர், நகைக்கடன் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 1:53 AM IST (Updated: 4 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் தனிநபர், நகைக்கடன் அதிகரித்து காணப்படுகிறது.

விருதுநகர், 
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நிலைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கிகளில் கடன் வழங்குவது குறைந்திருக்கிறது.
பெரிய தொழில்கள் 
 வங்கிகள் வழங்கும் ஒட்டு மொத்த கடனில் தொழில் துறையினருக்கு வழங்கப்படும் கடன்மட்டும் 27 சதவீத பங்கு கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஓராண்டில் வணிக வங்கிகளின் கடன் வளர்ச்சி 6.4 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
 பெரிய தொழில்களுக்கான கடன்கள் 6.2 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.  ஒட்டுமொத்தமாக 36 துறைகள் மற்றும் துணைத்துறைகள் கொரோனா பாதிப்புக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் கடன் குறைந்துள்ளது. ஆனாலும் தனிநபர் கடன், வாகன கடன், நகைக் கடன் போன்றவை அதிகரித்து உள்ளது.
வீட்டுக்கடன் 
 தனிநபர் கடன் 11.9 சதவீதம் அதிகரித்து ரூ. 67 லட்சத்து 86 ஆயிரத்து 518 கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் கடனுக்கு மற்ற கடனைவிட வட்டி வீதம் அதிகம் என்றாலும் வருமானத்தின் அடிப்படையில் தனிநபர் கடன் வழங்கப்படுவதால் அதிகம்பேர் தனிநபர் கடனைபெற்றுள்ளனர். வீட்டுக்கடன் பிரிவில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை 9.7 சதவீதம் உயர்ந்து கடன் ரூ. 16 லட்சத்து 64 ஆயிரத்து 645 கோடியாக உயர்ந்துள்ளது.
 ஊரடங்குகாலத்தில் வருமானம் குறைந்து போன நிலையிலும் ஏற்கனவே ஆரம்பித்த வீடு கட்டும் பணியை முடிப்பதற்கும் அதிகமான பேர் வீட்டுக்கடன் வாங்கியுள்ளனர். தனி வீடுகளில் தேவையை உணர்ந்து பலரும் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். வாகனக்கடன் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 714 கோடியாக உயர்ந்துள்ளது.
வைப்பு நிதிச்சான்று 
 பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படாதநிலையில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் வாகனக்கடன் அதிகரித்துள்ளது. 81சதவீதம் மற்ற கடன்களை விட நகைக்கடன் தான் மிகவும் அதிகரித்துள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் எளிதில் கடன்பெற நகைக்கடனையே நாடிச்செல்லும்நிலை இருந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் நகைக்கடன் 81 சதவீதம் அதிகரித்து ரூ.62ஆயிரத்து 221 கோடியாக உயர்ந்துள்ளது.  
வங்கிகளில் வைப்பு நிதிச்சான்றை அடமானம் வைத்து கடன் பெறுவோர் எண்ணிக்கையும் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் ரூ.65 ஆயிரத்து 390 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளுக்கான கடன் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதிகரிப்பு 
 நகைக்கடன், வீட்டுக்கடன் வாகனக்கடன் வாங்குவது அதிகரித்து வந்தாலும் கடன் அட்டை மூலம் கடன் வாங்குவது 5.3சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
 கடந்த ஓராண்டு காலத்தில் வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்குவதற்கான நுகர்வோர் கடன் 19.3 சதவீதம் குறைந்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததாலும், குடும்ப உறுப்பினர் வருமானம் பாதிக்கப்பட்டிருந்தாலும் நுகர்வோர் கடன் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ஊரடங்கு காலத்தில் தொழில் கடன் குறைந்துள்ள நிலையில் தனிநபர் கடனே அதிகரித்துள்ளது.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

Next Story