

இட்டமொழி:
நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரத்தில் நேற்று முன்தினம் கரடி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்குள்ள வாழைத்தோட்டத்தில் பதுங்கியது. கரடியை பார்த்த பொதுமக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரக அலுவலர் கருப்பையா, வனவர் அழகர்ராஜ், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சுப்புலட்சுமி, மதியழகன், மாரித்துரை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வந்து தோட்டத்தில் பதுங்கிய கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவர் மனோகரன், உதவியாளர் அர்னால்ட் ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பெரிய கூண்டு ஒன்று கொண்டு வரப்பட்டு, அதில் கரடிக்கு பிடித்தமான பலாப்பழம், மாம்பழம், பனம் பழம் ஆகியவற்றை வனத்துறையினர் போட்டுச் சென்றனர். ஆனால் கரடி அந்த கூண்டுக்குள் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு அங்கிருந்து வேறொரு இடத்திற்கு தப்பி சென்றுவிட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் கரடி கூண்டில் சிக்கி இருக்கும் என்று நினைத்து வனத்துறையினர் வந்தனர். ஆனால் அதில் கரடி இல்லாததால் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேடி சென்றனர். தொடர்ந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பார்பரம்மாள்புரத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு வரை வாழைத்தோட்டத்தில் தான் கரடி பதுங்கியிருந்தது. அதை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
ஆனால் அந்த கரடி கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அந்த கரடி ஏதாவது கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் தான் பதுங்கி இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பாக அந்த கரடியை வனத்துறையினர் பிடிக்க வேண்டும்' என்றனர்.