ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் ரூ.37½ லட்சம் மோசடி
நாகர்கோவிலில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் ரூ.37½ லட்சத்தை மோசடி செய்த 2 தனியாா் நிறுவன ஊழியர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் ரூ.37½ லட்சத்தை மோசடி செய்த 2 தனியாா் நிறுவன ஊழியர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தனியார் நிறுவனம்
நெல்லை மாவட்டம் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்தந்த வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவன மேலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் நிறுவனத்தின் மூலம் நாகர்கோவிலில் உள்ள 12 தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து உரிய ரசீதுடன் பணத்தை பெற்று, அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பி வருகிறோம். இந்த பணிகளில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த சபரீஷ் மற்றும் தோவாளை நடுத்தெருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
ரூ.37½ லட்சம் மோசடி
இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் நிரப்பப்பட்ட ஏ.டி.எம். எந்திரங்களில் குறைவான பணம் நிரப்பப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து புகார்கள் வந்தன. இதனைதொடர்ந்து நான் (மகேஷ்குமார்), சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சபரீஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனிடம் விசாரித்தபோது, அவர்கள் ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பாமல் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
எனவே சபரீஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் மோசடி செய்த ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்தை மீட்டு, அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் சபரீஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் மீது குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு வழக்குப்பதிவு செய்தார். இதனை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
Related Tags :
Next Story