பெங்களூரு அருகே 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை
பெங்களூரு அருகே 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். குற்றங்களில் ஈடுபடக்கூடாது என ரவுடிகளை, போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூரு அருகே 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். குற்றங்களில் ஈடுபடக்கூடாது என ரவுடிகளை, போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ரவுடிகளின் வீடுகளில் சோதனை
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா, ஆனேக்கல் தாலுகாக்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு, பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து நெலமங்களா டவுன், புறநகர், தியாமகொண்டலு, தாபஸ்பேட்டை ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆனேக்கல், அத்திபெலே, சூர்யாநகர் உள்ளிட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில் நேற்று அதிகாலை 4 மணியில் இருந்தே போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசார் எச்சரிக்கை
அதிகாலையில் இருந்து காலை 9 மணிவரை இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக 150-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரவுடிகளின் வீடுகளில் இருந்து கத்திகள், அரிவாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி இருந்தார்கள்.
ரவுடிகள் செய்யும் தொழில், அவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்திருந்தனர். மற்ற ரவுடிகளை குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பெங்களூருவை தொடர்ந்து பெங்களூரு புறநகரில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story