சேலத்தில் பயங்கரம்: வாழை இலை வியாபாரி கொலை-மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை


சேலத்தில் பயங்கரம்: வாழை இலை வியாபாரி கொலை-மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 4 Aug 2021 3:17 AM IST (Updated: 4 Aug 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வாழை இலை வியாபாரி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
சேலத்தில் வாழை இலை வியாபாரி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாழை இலை வியாபாரி
சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 29). இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகே வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். பிரபு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் வசித்து வந்த தனது அக்காள் தேவியின் மகளான ஷாலினி (24) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் நிரஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.
பிரபு தனது வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். முதல் தளத்தில் அவருடைய தாய் துளசியும், அக்காள் தேவியும் வசித்து வந்தனர். 2-வது தளத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் பிரபு வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, ஷாலினி 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தார். அதன்பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அந்த வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிரபு இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்றனர். இதில் பிரபுவின் காதில் ரத்தம் வடிந்தும், உள்ளங்கையில் லேசான காயமும் இருந்தது. இதனால் அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
பின்னர் இதுகுறித்து ஷாலினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர், நள்ளிரவு நேரத்தில் 2 பேர் எங்களுடைய வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் என்னுடைய தாலியை பிடித்து இழுத்தனர். மேலும் அவர்கள் என்னை தாக்கியதில் படிக்கட்டில் உருண்டதில் மயக்கம் அடைந்தேன். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது கணவர் இறந்து கிடந்தார். அவர்கள் எனது கணவரை, கொன்று விட்டதுடன், வீட்டில் மிளகாய் பொடியையும் தூவி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
ஆண் நண்பர்களுடன் பழக்கம்
ஷாலினியின் தாலி கொடி அறுந்திருந்தாலும் வீட்டில் மிளகாய் பொடி ஏதும் தூவப்படவில்லை. மேலும் பிரபு வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தவுடன் படியின் கேட்டையும் பூட்டிவிட்டு தான் வருவார். இதனால் கேட்டை தாண்டி யாரும் உள்ளே வரமுடியாது. மேலும் ஷாலினியின் முன்னுக்கு பின் முரணான தகவலால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
இதனால் ஷாலினியிடம் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ஷாலினி டிக் டாக், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் மூலம் அவருக்கு ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் பிரபு அவரை கண்டித்ததுடன் செல்போனையும் பறித்துக் கொண்டார். எனினும் கணவருக்கு தெரியாமல் ஷாலினி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
துறையூரை சேர்ந்தவருடன் தொடர்பு
இதனிடையே திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஒருவருக்கும், ஷாலினிக்கும் முகநூல் மூலம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியாக சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டி துறையூரை சேர்ந்தவரை சேலத்துக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து பிரபுவை கொலை செய்திருக்கலாம்.
துறையூரை சேர்ந்தவரை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அவரை பிடித்தால் தான் பிரபு எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பன உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர்.
சேலத்தில் வாழை இலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story