சேலத்தில் வாலிபர் தற்கொலை: கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிபர் தற்கொலை
சேலம் அன்னதானப்பட்டி கருவாடுமண்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற மைக்கேல் (வயது 28). இவருடைய மனைவி தீபா (25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிறந்து 6 மாதங்களே ஆன வெற்றிவேல் என்ற ஆண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக தீபா மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவர் அதன்பிறகு திரும்பி வரவில்லை.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி புகார்
இந்தநிலையில், நேற்று மதியம் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவரின் மாமனார் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி தீபா, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் மணிகண்டன் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற விவரம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி தீபாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இது ஒருபுறம் இருக்க, சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகேயுள்ள ஒரு டீக்கடையில் தீபாவின் தம்பி தீபன்ராஜ், இவரது நண்பர் மதன்குமார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் அவர்கள் இருவரையும் அடித்து தாக்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த தீபா மற்றும் அவரது உறவினர்கள் இறந்துபோன மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நேற்று மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த டவுன் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தீபாவின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story