திருச்சி காவிரி கரையோரங்களில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
கொரோனா காரணமாக நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால் திருச்சி காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.
கொரோனா காரணமாக பொதுமக்கள் வழிபட தடை:
திருச்சி,
கொரோனா காரணமாக நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால் திருச்சி காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.
ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ந் தேதி நீர்நிலைகளில் கொண்டாடப்படும் விழாவாகும். கிராமப்பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகிறார்கள். ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பெருக்கில் விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை. உழவர்கள் இந்த நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.
அதற்கு வற்றாத ஜீவ நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் வந்தது. மேலும், இந்த நன்னாளில் காவிரி தாயை வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதுமணத்தம்பதிகள்
குடும்பத்துடன் காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று காவிரி அன்னைக்கு பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் ஆகியவற்றை வைத்து வணங்கி புதிய மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டி கொள்வார்கள். ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போட்டுக்ெகாள்வார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. புதுமணத்தம்பதிகள் திருமணத்தன்று அணிந்து இருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள்.
இதுபோல் கன்னிப்பெண்கள் சிறந்த கணவர் அமைய மஞ்சள் கயிறு வைத்து வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் ஆகியவற்றை சமைத்து காவிரி அன்னைக்கு படைத்து குடும்பத்துடன் நீர்நிலைகளில் அமர்ந்து சாப்பிடுவார்கள். காவிரி அன்னையே உன்னை போல இந்த தம்பதியின் வம்சமும் காலாகாலத்துக்கும் நீடிக்க வேண்டும். வாழையடி வாழையென வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
பொதுமக்களுக்கு தடை
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்தாண்டு கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், தற்போது தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இந்தாண்டும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்கள் நீர்நிலைகளில் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதேபோல் திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவில்களான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி ஆகிய கோவில்களில் பக்தர்கள் நேரடியாக வந்து தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் பெருமளவு கூடி புனித நீராடி வழிபாடு நடத்துவார்கள். இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவுக்கு அனுமதியில்லாததால் காவிரி கரையோர பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அம்மாமண்டபம் சாலையில் ஆங்காங்கே போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர்.
களையிழந்தது...
ஆடிப்பெருக்கை கொண்டாட குடும்பத்துடன் வந்தவர்கள், மாலைகளுடன் வந்த புதுமணத்தம்பதிகள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். படித்துறைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலர் போலீஸ் பாதுகாப்பு போடப்படாத காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளுக்கு சென்று அங்கு படையலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினார்கள். சிலர் காவிரி
கரையோரங்களில் நின்றபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது, பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது 2 ஆண்டாக காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடியும் கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட முடியாத சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடியதால் திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
முக்கொம்பு சுற்றுலா மையம்
இதுபோல் ஜீயபுரம் அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலா மையத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுவது வழக்கம். தற்போது சுற்றுலாமையம் மூடப்பட்டுள்ளதால் முக்கொம்பு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் முக்கொம்பு நுழைவு வாயில் பகுதியில் போலீசார் மற்றும் பொது பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story