ஆடி கிருத்திகையன்று மீன்குழம்பு வைத்ததால்: மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய பெயிண்டர் தற்கொலை


ஆடி கிருத்திகையன்று மீன்குழம்பு வைத்ததால்: மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2021 12:01 PM IST (Updated: 4 Aug 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

ஆடிக்கிருத்திகையன்று மீன்குழம்பு வைத்ததால் ஆத்திரமடைந்த பெயிண்டர் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கினார். போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர், 

சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி துர்கா(37). இவர்களுக்கு மோகன்(17), ஜீவா( 15) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குமார் ஆடிக்கிருத்திகை தினமான நேற்று முன்தினம் காலை சாமி கும்பிட்டு விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையே இரவு குழந்தைகள் விருப்பட்டதன் காரணமாக துர்கா வீட்டில் மீன் குழம்பு வைத்து கொடுத்துள்ளார்.

இதற்கிடையே வேலை முடிந்து இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த குமார் சாப்பிட அமர்ந்தார். அப்போது மீன் குழம்பை பார்த்த அவர், ஆடிக்கிருத்திகை தினத்தன்று வீட்டில் எதற்காக மீன் குழம்பு வைத்தாய்? என துர்காவிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாக்குவாதம் முற்றவே, அருகே இருந்த இரும்பு கம்பியால் துர்காவை குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தாக்குதலில் ரத்தகாயமடைந்த துர்கா மயங்கி விழுந்தார்.

உடனே அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக ரெட்டேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் துர்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தான் தாக்கியதில் மனைவி இறந்து போய் விடுவோரா? போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் இருந்த குமார் மதுபோதையில் வீட்டிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story