இரட்டை மாட்டுவண்டி பந்தய மாடுகளுக்கு பயிற்சி
கம்பம் பகுதியில் இரட்டை மாட்டு வண்டி பந்தய மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கம்பம்:
கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாய தொழிலை சார்ந்து கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் தமிழர்கள் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகளுக்கான காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுகள் வயது வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பந்தய மாடுகளுக்கு, சோள நாற்று, பருத்திக்கொட்டை, பேரீச்சம்பழம் என உணவுக்கட்டுப்பாடுடன் நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி என புத்துணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் மாடுகளை விற்கவேண்டிய சூழல் எழுந்தது. அதேசமயம் பாரம்பரிய விளையாட்டு போட்டியான இதனை அரசு அனுமதியுடன் நடத்த வேண்டும் என பந்தய குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் சிலர் மாடுகளை விற்காமல் அவ்வப்போது பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி கம்பம்மெட்டு அடிவாரப்பகுதியில் உள்ள மானவாரி நிலங்களில் மாடுகளுக்கு ஏர்பூட்டி நிலத்தில் உழும் வகையில் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாடு உரிமையாளர் கூறுகையில், பந்தயத்தில் வேகமாக ஓடும்போது மாடுகளுக்கு மூச்சு இளைக்கும். அப்போது மாடுகள் ஓடும் வேகம் குறையும்.
இதனை தவிர்ப்பதற்காக நாள்தோறும் சுமார் 2 மணிநேரம் நிலத்தில் ஏர்பூட்டி பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் மாடுகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும், பந்தயங்களில் ஓடும்போது அசதி ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.
Related Tags :
Next Story