பழங்குடியினர் வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்ய கண்காணிப்பு குழுக்கள்
பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கண்காணிப்பு குழுக்களை அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி:
பழங்குடி மக்கள்
பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லான் காலனியில் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த மாதம் 24-ந்தேதி கலெக்டர் முரளிதரன் அந்த குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடிசை வீடுகளுக்குள் சென்று கலெக்டர் பார்வையிட்ட போது ஒரு வீட்டுக்குள் அடுப்பு எரித்துவிட்டு மீதம் கிடந்த கருவேல முள் குத்தியதில் கலெக்டருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அந்த மக்கள் வசித்து வருவதால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலர்கள் அங்கு சென்று குடும்பம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தினர். பின்னர் அரசு துறை அலுவலர்கள் அங்கு சென்று அந்த மக்களின் கோரிக்கைகள், அவர்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். இதுகுறித்து கலெக்டருக்கு அதிகாரிகள் அறிக்கை அளித்தனர்.
கண்காணிப்பு குழுக்கள்
இதையடுத்து வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் செல்லான் காலனியில் சிறப்பு முகாம்கள் நடத்த கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
மேலும், பழங்குடியின மக்களின் வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்தல், அதற்குரிய பயன்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு என்று கண்காணிப்பு குழுக்களை அமைத்தும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த குழுவினர் செல்லான் காலனி பகுதியிலும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.
Related Tags :
Next Story