வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு


வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
x
தினத்தந்தி 4 Aug 2021 8:34 PM IST (Updated: 4 Aug 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவை என்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

ஊட்டி,

சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவை என்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 77-வது பேட்ச் முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். மேலும் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் உள்பட 19 நட்பு நாடுகளை சார்ந்த 30 அதிகாரிகள் உள்பட பயிற்சி முடித்த 479 அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். 
அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

நாட்டின் முக்கிய பயிற்சி கல்லூரியாக உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு நமது முப்படைகள் மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண் அதிகாரிகள் அதிகம் பேர் பயிற்சி பெற்று வருவது வரவேற்கத்தக்கது.

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு

நீலகிரி மலைகளின் இயற்கை அழகும், காலநிலையும் கற்றலுக்கு உகந்தது. இந்த பகுதியின் காலநிலை மற்றும் வானிலையை விவரிக்க சல்யூரியஸ் என்ற வார்த்தை அடிக்கடி சொல்லப்படுகிறது. அது ஆரோக்கியம் தருவதை குறிக்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் மிகவும் இனிமையான வானிலை இருக்கும். இதை கருத்தில் கொண்டு 19-ம் நூற்றாண்டில் மெட்ராஸ் மாகணத்தின் சார்பில் இந்த பயிற்சி கல்லூரி நிறுவப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள், திறமை மற்றும் திறனை மதிப்பிடுவதன் அடிப்படையில் கடுமையான செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கொரோனா காலத்திலும் ஆன்லைன் மூலம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உள்நாட்டுமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய உத்வேகம் வழங்கப்படுகிறது. முப்படைகளை எதிர்காலத்துக்கு தயார்படுத்தும் நோக்கில் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அர்ப்பணிப்பை கண்டு மகிழ்ச்சி

முப்படைகள் அதிக ஒருங்கிணைப்பை நோக்கி செயல்படுவதால், கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு வலுவடையும். இந்த படைகளின் அயராத முயற்சி மற்றும் தியாகங்கள் மக்களின் நன்மதிப்பை பெற்று உள்ளன. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உயர்ந்த மன உறுதியையும், கடமைக்கான அர்ப்பணிப்பையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். உங்களில் பெரும்பாலானோரும் இதுபோன்ற சவால்களை கையாளும் முன்னணி வீரர்களாக இருக்கின்றீர்கள். போர் மற்றும் இதர காலங்களில் நாட்டுக்காக விலைமதிப்பற்ற சேவையாற்றி வருகிறீர்கள்.

உள்நாடு மற்றும் வெளிநாடு பாதுகாப்பு சவால்கள், இயற்கை பேரிடர் காலங்களில் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்துடன் ராணுவத்தினர் சேவையாற்றி வருகின்றனர். தற்போதைய காலம் மனித குலத்துக்கு சவாலான காலமாக உள்ளது. கொரோனா காலத்திலும் முப்படையினர் எல்லை பாதுகாப்பு பணி மற்றும் முன்கள பணியிலும் சிறப்பாக செயல்படுவது பாராட்டத்தக்கது. நாம் தற்போது மாற்றங்கள் நிறைந்த சவாலான காலத்தை கடந்து வருகிறோம். தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்துக்கள் மாறி வருகின்றது. தீவிரவாதம், பயங்கரவாதம் என பல்வேறு சவால்களை ஏற்படுத்தி உள்ளன.

தொழில்நுட்ப மேம்பாடு

குறிப்பாக சைபர் உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. அதனை சமாளிக்கும் திறனை நாம் பெற்று உள்ளோம். 21-ம் நூற்றாண்டு அறிவுசார் சமூகமாக உள்ளது. இதுவே நமது நாட்டின் உண்மையான பலமாகும். ஒவ்வொரு பாதுகாப்பு அதிகாரிகளும் அறிவுசார் வீரர்களாக இருக்க வேண்டும். நமது தேசிய நலன்களை பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் பாதுகாப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தலாம். திறமையான தலைவர்களாவதற்கு, நீங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை களங்களில் சிறந்து விளங்க வேண்டும். நம்பிக்கை, தைரியம், சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, பணிவு மற்றும் எளிமை ஆகியவை உங்களை ஒரு மனிதனாக வலுப்படுத்தும். அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிநவீன யுக்திகள், தொடர்ச்சியான கற்றல் உங்களை சிறந்த நிபுணர்களாக மாற்றும். 
இவ்வாறு அவர் பேசினார்.

நினைவு பரிசு

முன்னதாக முப்படைகளில் பயிற்சி முடித்த 4 அதிகாரிகள் தங்களது பயிற்சி மற்றும் இந்திய ராணுவத்தின் சிறப்புகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் கல்லூரி சார்பில் ஜனாதிபதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் லெப்டினென்ட் ஜெனரல் கலோன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டி ராஜ்பவனில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டு வெலிங்டனுக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும், மீண்டும் ராஜ்பவனுக்கு திரும்பினார்.


Next Story