மேசை, நாற்காலி உருவாக்கும் ஆதிவாசி மக்கள்
காட்டு செடிகளின் குச்சிகளை கொண்டு ஆதிவாசி மக்கள் மேசை, நாற்காலி உருவாக்கி வருகின்றனர்.
கூடலூர்,
காட்டு செடிகளின் குச்சிகளை கொண்டு ஆதிவாசி மக்கள் மேசை, நாற்காலி உருவாக்கி வருகின்றனர்.
ஆதிவாசி மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு நாயக்கர், இருளர், குரும்பர், பனியர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வனத்தை சார்ந்து வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் வனத்தில் கிடக்கும் பொருட்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விவசாயம், கூலி வேலைக்கு செல்ல தொடங்கினர்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மூலம் பல்வேறு பயிற்சிகள் பெற்று கைவினைப்பொருட்களை வடிவமைப்பதில் ஆதிவாசி மக்கள் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.
மேசை, நாற்காலி
அதன்படி கூடலூர், முதுமலை பகுதியில் கணிசமாக வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்கள் பார்த்தீனியம், உன்னி போன்ற காட்டு செடிகள் மூலம் கிடைக்கக்கூடிய குச்சிகளை கொண்டு நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து வருகின்றனர்.
இது தவிர யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் கைவினைப்பொருட்களை வடிவமைக்கின்றனர். அந்த பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் வாழ்க்கை தரமும் மேம்பட்டு வருகிறது.
நியாயமான வருவாய்
இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- காடுகளில் வளர்ந்து வீணாகும் செடிகளின் குச்சிகளில் இருந்து இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பது குறித்து தன்னார்வலர்கள் பயிற்சி அளித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதை வெளி மார்க்கெட்டில் தன்னார்வ அமைப்பினர் விற்பனை செய்கின்றனர்.
இதன் மூலம் எங்களுக்கும் நியாயமான வருவாய் கிடைக்கிறது. சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குச்சிகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உள்ளூரில் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story