வெங்கக்கல்பட்டி பொதுமக்கள் சாலை மறியல்
வெங்கக்கல்பட்டி மேம்பாலம் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுத்துவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
கரூர்
அடிக்கடி விபத்து
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி வழியாக கரூர்-திண்டுக்கல் சாலை செல்கிறது. அதே பகுதியில் கரூரில் இருந்து திருச்சி செல்லும் இணைப்புச்சாலை, மதுரை, கோவை செல்லும் இணைப்புச்சாலை பகுதிகளும் உள்ளது. மேம்பாலத்திற்கு முன்பாக வேகத்தடை இல்லாமல் இருப்பதால் பாலப்பகுதியில் உள்ள இணைப்புச் சாலை வழியாக வரும் வாகனங்கள் திண்டுக்கல் செல்ல பாலத்தை நோக்கித் திரும்பும்போது மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் அந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
மேலும் அடிக்கடி விபத்து நடப்பதால், வெங்கக்கல்பட்டி பகுதியில் வசிக்கும் வயாதனவர்கள், சிறுகுழந்தைகளும் சாலையை கடக்கும் போது அச்சத்துடன் கடந்து சென்று வருகிறார்கள். இதனால் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் பகுதியில் திண்டுக்கல் சாலையில் வேகத்தடை மற்றும் சிக்னல், காலை மாலை நேரங்களில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று காலையும் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் இணைப்புச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திரும்பியபோது விபத்தில் சிக்கினர். இதனைக்கண்ட அப்பகுதியினர் முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடிக்கடி விபத்து நடப்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் தாந்தோணிமலை போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகத்தடை மற்றும் போலீசார் சிக்னல் அமைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திண்டுக்கல் சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story