புதுக்கோட்டை கோர்ட்டில் 4 பேர் சரண்


புதுக்கோட்டை கோர்ட்டில் 4 பேர் சரண்
x
தினத்தந்தி 4 Aug 2021 11:00 PM IST (Updated: 4 Aug 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை கோர்ட்டில் 4 பேர் சரண்

புதுக்கோட்டை, ஆக.5-
ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதிவாணன் (வயது 40). நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வில் இணைந்து கட்சி பணிகளை கவனித்து வந்தார். மேலும், மதிவாணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணம்பாளையம் ரோடு ராமமூர்த்தி நகரில் அம்மா பொது இ-சேவை மையம் தொடங்கி அதனை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2-ந்தேதி இரவு மதிவாணன் தனது இ-சேவை மையத்தின் முன்பு நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, இ-சேவை மையத்திற்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் நாற்காலியில் உட்கார்ந்திருந்த மதிவாணனின் முகம், தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடி துடித்து செத்தார். அதன் பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், மதிவாணனை கொலை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றாம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று 4 வாலிபர்கள் சரண் அடைந்தனர். அவர்கள், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4-வது வீதியை சேர்ந்த நிஜாமுதீன் (வயது 35), கருங்கல்பாளையம் ராமுமூர்த்தி நகரை சேர்ந்த தேவா (22), சிந்தன் நகரை சேர்ந்த வேல்முருகன் (21), நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்த விக்கி (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரிடமும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். பின்னர் 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story