இந்த வார இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் -கலெக்டர் அறிவிப்பு
வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த வார இறுதிக்குள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை, ஆக
வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த வார இறுதிக்குள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பொது சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் வணிக, வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்களிடையே கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கை சுத்தம்
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வர்த்தக நிறுவனங்கள் தங்களது கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வருவதை கட்டாயமாக்க வேண்டும்.
முககவசம் அணியாமல் வருபவர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உள்ள நுழைவு வாயில் பகுதிகளில் கைகளை கழுவும் வகையில் சோப்பு அல்லது நோய்த்தொற்று நீக்கம் செய்யும் கிருமி நாசினி திரவம் வைத்திருந்து கடைகளுக்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி
மேலும் கடைகளில் அதிக அளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் வணிகர்களும் அவசியம் இவைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதை அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வார இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கடைகளின் உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதா மணி, சிவகங்கை நகராட்சி ஆணையாளர் அய்யப்பன், பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் வர்த்தக சங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story