திருவோணம் அருகே பரபரப்பு: இளம்பெண் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
திருவோணம் அருகே இளம் பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ஒரத்தநாடு:-
திருவோணம் அருகே இளம் பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருமணம்
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 37). கட்டிட தொழிலாளி.
இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் ரதிதேவி என்கிற கவுசல்யா(24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.
மர்ம சாவு
கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுசல்யா நேற்று மதியம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவருடைய கழுத்தில் தூக்கு மாட்டி இருந்தது. மேலும் தரையில் உட்கார்ந்த நிலையில் உடல் இருந்தது.
உறவினர்கள் சாலை மறியல்
இதனை அறிந்த கவுசல்யாவின் உறவினர்கள் கந்தர்வக்கோட்டையில் இருந்து இடையாத்தி பகுதிக்கு வந்தனர். கவுசல்யாவை அடித்துக் கொலை செய்து தூக்கு மாட்டி விட்டுள்ளதாகவும், தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் இடையாத்தி-வேலம்பட்டி பிரிவு சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், தாசில்தார் தரணிகா துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுனில்(ஒரத்தநாடு), செங்கமலக் கண்ணன்(பட்டுக்கோட்டை) உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கவுசல்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்டப்படி நடவடிக்கை
அப்போது, நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கவுசல்யாவின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி கலெக்டர் விசாரணை
கவுசல்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலசுந்தர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story