கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; புதிதாக 29 மந்திரிகள் பதவி ஏற்பு


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; புதிதாக 29 மந்திரிகள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 5 Aug 2021 3:10 AM IST (Updated: 5 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மந்திரிசபை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 29 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கெலாட் பதப்பிரமாணம் செய்து வைத்தார்.

பெங்களூரு: பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மந்திரிசபை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 29 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கெலாட் பதப்பிரமாணம் செய்து வைத்தார்.

மந்திரிகள் பதவி ஏற்றனர்

கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த (ஜூலை) மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் 30-ந் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி உள்பட மேலிட தலைவர்களை சந்தித்துவிட்டு கர்நாடகம் வந்தார். பிறகு மீண்டும் மறுநாள் அதாவது 31-ந் தேதியே அவர் டெல்லிக்கு சென்று மந்திரிசபை விரிவாக்கம் குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

அங்கு 3 நாட்கள் தங்கிய பசவராஜ் பொம்மை, மந்திரிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் பெற்று நேற்று காலை பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் 4-ந் தேதி (நேற்று) பகல் 2.15 மணிக்கு நடைபெறும் என்று அவர் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த விழா தேசிய கீத இசையுடன் தொடங்கியது.

பதவி பிரமாணம்

இதில் புதிய மந்திரிகளாக ஈசுவரப்பா (சிவமொக்கா தொகுதி), ஆர்.அசோக் (பத்மநாபநகர்), பி.சி.பட்டீல் (இரேகெரூர்), அஸ்வத் நாராயண் (மல்லேசுவரம்), ஸ்ரீராமுலு (மூலகால்மூரு), உமேஷ்கட்டி (உக்கேரி), எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), முருகேஷ் நிரானி (பீலகி), சிவராம் ஹெப்பார் (எல்லாப்புரா), சசிகலா ஜோலே (நிப்பானி), சுனில்குமார் (கார்கலா), அரகா ஞானேந்திரா (தீர்த்தஹள்ளி), கோவிந்த் கார்ஜோள் (முதோல்), முனிரத்னா (ஆர்.ஆர்.நகர்), எம்.டி.பி.நாகராஜ் (எம்.எல்.சி.), கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), மாதுசாமி (சிக்கநாயக்கனஹள்ளி), ஹாலப்பா ஆச்சார் (எலபுர்கா), சங்கர் பட்டீல் முனேகொப்பா (நவலகுந்து), கோட்டா சீனிவாசபூஜாரி (எம்.எல்.சி.), பிரபு சவான் (அவுராத்), சோமண்ணா (கோவிந்தராஜ்நகர்), எஸ்.அங்கார் (சுள்ளியா), ஆனந்த்சிங் (ஒசப்பேட்டே), சி.சி.பட்டீல் (நரகுந்து), பி.சி.நாகேஸ் (திப்தூர்), நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை) ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கெலாட் பதவிப்பிரமாணமுமு், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

எடியூரப்பா

பதவி ஏற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு கவர்னர் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மந்திரி பி.சி.பட்டீல் விவசாயிகள் மற்றும் பசவண்ணர் பெயரில் பதப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். மற்ற மந்திரிகள் அனைவரும் கடவுள் பெயரில் பதவி ஏற்பதாக உறுதியளித்தனர். 

இந்த பதவி ஏற்பு விழா 75 நிமிடங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் புதிய மந்திரிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊடகத்தினர் எம்.எல்.ஏ.க்கள் விடுதி அருகில் உள்ள நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மெயின் கேட் மூலம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விழா அரங்கிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு அனைவரின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. சானிடைசர் வழங்கப்பட்டது. 

அனைவரும் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றப்படவில்லை. ஆர்.அசோக், பைரதி பசவராஜ், ஈசுவரப்பா உள்ளிட்டோர் பதவி ஏற்றபோது, அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.

லிங்காயத் சமூகத்தினர்...

மந்திரிகள் பதவி ஏற்றதையொட்டி ராஜ்பவனில் ரோட்டில் வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விழா முடிந்ததும், போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது. புதிதாக மந்திரி பதவி ஏற்றவர்களில் ஒரே ஒருவர் அதாவது சசிகலா ஜோலோ மட்டுமே பெண். இந்த 29 மந்திரிகளில் 8 பேர் லிங்காயத் சமூகத்தினரும், 7 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களும், 7 பேர் ஒக்கலிகரும், தலித் சமூகத்தை சேர்ந்த 3 பேரும், ரெட்டி சமூகத்தை சேர்ந்த ஒருவரும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளனர். 29 மந்திரிகள் பதவி ஏற்றதன் மூலம் மந்திரிசபையின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன.

போராட்டம்

இதற்கிடையே மந்திரி பதவி கிடைக்காத பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முதல்-மந்திரி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கே பதவி

எடியூரப்பா பதவி விலகினாலும் பா.ஜனதாவில் அவரது செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதற்கு முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் நியமனம் வெளிப்படுத்தியுள்ளது. பசவராஜ் பொம்மை எடியூரப்பாவின் மிக தீவிரமான ஆதரவாளர். மேலும் நேற்று பதவி ஏற்ற மந்திரிகளில் சுனில்குமார், எஸ்.அங்கார், ஈசுவரப்பா உள்ளிட்டோரை தவிர்த்து மற்ற அனைவரும் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் ஆவார்கள். 

எடியூரப்பாவின் பரிந்துரைப்படி மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடியூரப்பாவை பா.ஜனதா மேலிடம் பகைத்துக்கொள்ள விரும்பவிலலை என்று தெளிவாக தெரிகிறது.

Next Story