பெங்களூரு, மங்களூருவில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேர் கைது


பெங்களூரு, மங்களூருவில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 3:11 AM IST (Updated: 5 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு, மங்களூருவில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மங்களூரு: பெங்களூரு, மங்களூருவில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். 

முன்னாள் எம்.எல்.ஏ.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாஸ்திகட்டே பகுதியில் வசித்து வருபவர் இதனப்பா. இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

இதனப்பாவின் மகன் பாஷா. இவர் தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் பாஷாவின் பேத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து சிரியாவுக்கு சென்று அங்கு உள்ள பயங்கரவாத அமைப்புடன் இணைந்ததாக கூறப்படுகிறது. 

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில் பாஷாவின் மகன் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து இருந்தார். அந்த பெண்ணும், பயங்கரவாத அமைப்பில் இணைந்த பாஷாவின் பேத்தியும் ெதாடர்பில் இருந்து வருவதாகவும், சதித்திட்டங்களை அரங்கேற்ற ஆலோசனை நடத்தி வருவதாகவும் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று காலை பாஷாவின் வீட்டிற்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் பாஷா, அவரது மகன், மருமகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து சிரியாவில் பயங்கரவாத அமைப்பில் இணைந்த பெண் குறித்த சில தகவல்களை பெற்று கொண்டனர். 

4 பேர் கைது

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே முகமது அமீன், டாக்டர் ரகீஸ் ரஷீத், முஷாப் அன்வர் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் சேர்ந்து டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ததாகவும் கூறப்படுகிறது. மங்களூரு மட்டுமின்றி இந்த சோதனை பெங்களூரு, காஷ்மீரிலும் நேற்று நடந்தது. 

சோதனையின் முடிவில் ஏராளமான சிம்கார்டுகள், மடிக்கணினிகள், செல்போன்கள், ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் மங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்த அமர் அப்துல் ரகுமான், பெங்களூருவைச் சேர்ந்த சங்கர் வெங்கடேஷ் பெருமாள் என்கிற அலி முயவியா, காஷ்மீரைச் சேர்ந்த ஒபெய்ட் ஹமீது, முஷாமில் ஹசன் பட் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

Next Story