கோவேக்சின் தடுப்பூசி போட கால் கடுக்க காத்திருந்த பொதுமக்கள்


கோவேக்சின் தடுப்பூசி போட  கால் கடுக்க காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Aug 2021 3:13 AM IST (Updated: 5 Aug 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கால்கடுக்க காத்திருந்து கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கால்கடுக்க காத்திருந்து கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கோவேக்சின் தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசியே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி முகாம் அவ்வப்போது தான் நடைபெறுகிறது. இதனால் கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களால் 2-வது டோஸ் போட முடியாத நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு கோவேக்சின் தடுப்பூசி நேற்று முன்தினம் வந்தது. அதைத் தொடர்ந்து நேற்று கோவேக்சின் தடுப்பூசி முகாம் 25 இடங்களில் நடந்தது. ஆன்லைன் டோக்கன் மூலமாகவும், நேரடி டோக்கன் மூலமாகவும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையிலேயே ஆன்லைனில் டோக்கன் பெற பொதுமக்கள் முயற்சி செய்தனர். ஆனால் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆன்லைன் டோக்கன் முடிவடைந்து விட்டது.
கூட்டம் அலைமோதியது
எனவே ஆன்லைன் டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் நேரடியாக சென்று டோக்கன் பெற அதிகாலையிலேயே முகாம்களில் குவிந்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலைமோதியது. பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றனர்.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் டி.வி.டி. பள்ளி, வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி, குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, பறக்கை சி.டி.எம்.புரம் அரசு பள்ளி, சால்வேசன் ஆர்மி பள்ளி ஆகிய இடங்களில் நேரடி டோக்கன் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ள பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்தனர். புனித அலோசியஸ் பள்ளி, டதி பள்ளி, இந்து கல்லூரி ஆகிய இடங்களில் ஆன்லைன் டோக்கன் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. 
டோக்கன் கிடைக்கவில்லை
இதற்கிடையே ஒரு சில முகாம்களில் டோக்கன் பெற அதிகாலையில் இருந்தே வெகு நேரம் வரை பொதுமக்கள் காத்திருப்பதை அறிந்த அதிகாரிகள் முன்கூட்டி டோக்கன்களை வழங்கிவிட்டு காலை உணவு சாப்பிட்டு விட்டு வருமாறு அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து டோக்கன் பெற்றவர்கள் உணவு அருந்திவிட்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் பலருக்கும் தடுப்பூசி போட டோக்கன் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரத்து 171 பேர் முதல் டோசும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 545 பேர் 2-வது டோசும் செலுத்தி உள்ளனர். இதில் நீரிழிவு நோயாளிகள், இணை நோய் உள்ளவர்கள் 21 ஆயிரத்து 91 பேருக்கும், கர்ப்பிணிகள் 3 ஆயிரத்து 456 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்கள் 4 ஆயிரத்து 885 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

Next Story