தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள் வரையும் பணி தீவிரம்
தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள் வரையும் பணி தீவிரம்
கோவை
கோவை மாநகராட்சி அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க, தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
போஸ்டர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் குளங்கள் உள்ளிட்ட இடங்களை அழகுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், மற்றொரு பக்கம் நகரை அலங்கோலமாக்கும் வகையில்,
அரசு அலுவலக சுவர்கள், மேம்பால தூண்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலையோர சுவர்களில் அரசியல் கட்சிகள், தனிநபர் குடும்ப நிகழ்ச்சிகள், ஊர் திருவிழாக்கள், தனியார் நிறுவன விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
இதுபோன்ற போஸ்டர் விளம்பரங்களால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்தில் சிக்கி, உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே போஸ்டர் ஒட்ட அரசு சார்பில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
ஆனாலும் சிலர் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அரசு விதிகளை மதிக்காமல் போஸ்டர் ஓட்டுகின்றனர்.
சில இடங்க ளில் போஸ்டர் ஓட்டாதீர் என்று எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகத்தின் மீது கூட போஸ்டர் ஒட்டப்படுகின்றன.
பாரம்பரிய ஓவியங்கள்
இந்த நிலையில் கோவை மாநகராட்சி அலுவலக சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்கும் வகையில், தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஓவியங்களை வரைய மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
இதன்படி கோவை மத்திய மண்டல அலுவலக சுவற்றில் கடந்த சில நாட்களாக, பொது மக்களின் சிந்தனையை தூண்டும் வகையில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், அனைத்து மாநகராட்சி அலுவலக சுவர்களிலும் பொதுமக்களை கவரும் வகையில் ஓவியங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஓவியங்கள் வரையப்பட்ட சுவர்களில் போஸ்டர் ஒட்டினால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story