வீடு தேடிச்சென்று உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம்
வீடு தேடிச்சென்று உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சமாதேவி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான மருத்துவ சேவைக்காக வழங்கப்பட்ட நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வீடு தேடிச்சென்று
இந்த திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோயுடைய பொதுமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட துணை சுகாதார நிலையங்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள், துணை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர், பிசியோதெரபிஸ்ட், நோய் தடுப்பு சிகிச்சை செவிலியர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் பெண் தன்னார்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள தொற்றா நோயுடைய மக்களை வீடு தேடிச்சென்று அவர்களுக்கு முறையாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்குவர். இத்திட்டத்திற்கென வட்டாரத்திற்கு ஒரு தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை
இந்த திட்டத்தின் மூலம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 4,942 தொற்றா நோயுடையோர் வீட்டிற்கே சென்று மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் எளிய முறையில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். இத்திட்டம் தொடர்ந்து, மற்ற கிராமங்களிலும் படிப்படியாக நடை முறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி, கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், வளவனூர் நகர செயலாளர் ஜீவா, ஒன்றிய அவைத்தலைவர் அசோக்குமார், துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜசேகர், பூங்குன்றன், பொருளாளர் முரளிதரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பிரியங்கா, பஞ்சமாதேவி கிளை செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story