ஜோலார்பேட்டை அருகே போலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு


ஜோலார்பேட்டை அருகே  போலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2021 11:17 PM IST (Updated: 5 Aug 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரித்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜோலார்பேட்டை,

அடமானம் வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவரது மனைவி சத்யா தேவி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ரமேஷ் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது புள்ளானேரியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த 2012-ம் ஆண்டு தந்தை வாங்கிய ரூ.90 ஆயிரம் கடனுக்காக ரமேஷ், தனது பெரியப்பா மகன் வரதராஜ் என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்துள்ளார். அந்த பத்திரம் மூலம் வரதராஜின் அண்ணன் பாபு என்பவர் அவரது மனைவி வனரோஜா பெயரில் சொத்தை மாற்றியதாக கூறப்படுகிறது.

போலி ஆவணம் மூலம்

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாபு, அவரது மனைவி வனரோஜா, மகன் அபின் ஆகியோர் சேர்ந்து ரமேஷ் இவரது மனைவி சத்யாதேவி ஆகியோரை வீட்டிலிருந்து வெளியே விரட்டி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அதில் தனது வீட்டை போலி ஆவணம் மூலம்  கிரையம் செய்துள்ளதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து எங்களை தாக்கிவிட்டு வீட்டுக்கு பூட்டு போட்டு சென்ற வரதராஜ், பாபு, வனரோஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

3 பேர்மீது வழக்குப்பதிவு

இந்தநிலையில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து உத்தரவிட்டதன்பேரில் வரதராஜ், பாபு, வனரோஜா ஆகியோர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story