புதர்மண்டி கிடக்கும் சாலையால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம்


புதர்மண்டி கிடக்கும் சாலையால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:01 AM IST (Updated: 6 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே புதர்மண்டி கிடக்கும் சாலையால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து மேல் கூடலூர் வழியாக 4-ம் நெம்பர், லாரஸ்டன் உள்ளிட்ட கிராமங்களுக்கு தார்சாலை செல்கிறது. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் கூடலூர் வந்து செல்கின்றனர்.

 மேலும் பணிநிமித்தம் மற்றும் அலுவலக வேலைகளுக்காக அப்பகுதி மக்கள் காலையில் புறப்பட்டு கூடலூர் வருகின்றனர். இக்கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி கிடையாது.

இதனால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, ஜீப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோக்கால் மலையடிவார சாலை என்பதால் அதன் கரையோரம் காட்டு யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் அதிகளவு வாழ்ந்து வருகிறது. 

மேலும் சாலையின் ஓரங்களில் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வாகனங்களில் கிராம மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் இயக்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் இருபுறமும் புதர்மண்டி கிடப்பதால் இரவில் வன விலங்குகள் புதர்களுக்கு இடையே மறைந்திருந்து பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. 

மேலும்  தோட்ட தொழிலாளர்கள் பீதியுடன் சென்று வரு கின்றனர். எனவே சாலையை மூடியவாறு காணப்படும் புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

சாலையோரம் புதர்கள் அகற்றப்பட்டால் இரவில் வாகனத்தில் செல்லும்போது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நிற்பது தொலைதூரத்தில் தெரிந்துவிடும். இதனால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்துடன் சிறிது நேரம் நின்று விட்டு வனவிலங்குகள் அப்பகுதியில் இருந்து சென்ற பின்னர் புறப்பட்டு செல்வது வழக்கம். 

தற்போது புதர்கள் மண்டி கிடப்பதால் சாலையோரம் வனவிலங்குகள் நிற்பது தெரிவதில்லை. எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story