திசையன்விளையில் 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை


திசையன்விளையில் 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
x
தினத்தந்தி 5 Aug 2021 8:25 PM GMT (Updated: 2021-08-06T01:55:23+05:30)

திசையன்விளையில் 3 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளைடித்து சென்றனர்.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை மையப்பகுதியில் ஓ.எஸ். பஜார், அழகுவேல் பஜார்கள் உள்ளன. இந்த பஜார்களில் கடை வைத்துள்ள வியாபாரிகள் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தங்களது கடைகளை பூட்டிச் சென்றனர். 

இதை ேநாட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்தார். முதலில் அழகுவேல் பஜாரில் மளிகை கடை நடத்தி வரும் முருகேசன் என்பவர் கடையின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கு இருந்த ரூ.21 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தங்க நகைக்கடைக்கு சென்ற மர்ம நபர், முன்பக்க ஷட்டரின் பூட்டை உடைத்தார். 2-வது ஷட்டரின் பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதனால் அங்கு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

பின்னர் ஓ.எஸ்.பஜாரில் உள்ள ராஜதுரை என்பவர் கடைக்கு வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.25 ஆயிரம், உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்தார்.   தொடர்ந்து அருகில் உள்ள ஜான் நிர்மல் என்பவரின் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர், எதிரில் உள்ள செந்தில்வேல் என்பவருடைய மாவு அரவை ஆலை பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

நேற்று காலையில் வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த வியாபாரிகள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து அவர்கள் திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ் மேனன், பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், பஜார் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, ஓ.எஸ்.பஜாரில் உள்ள ஒருவரது வீட்டின் மாடியில் காயப்போட்டு இருந்த நைட்டியை மர்ம நபர் எடுத்து அணிந்து கொள்வதும், முகத்தை மறைப்பதற்காக முகமூடி அணியும் காட்சியும் பதிவாகி இருந்தது.
மேலும், அந்த நைட்டி அணிந்த மர்மநபர் தான் அடுத்தடுத்து கடைகளில் பணத்தை கொள்ளையடித்து சென்றதும், கைரேகை பதியாமல் இருப்பதற்காக பூட்டை உடைக்கும் போது, அதன்மேல் துணியை போர்த்தியபடி உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. 

இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நைட்டி அணிந்து கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story