கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:33 PM GMT (Updated: 5 Aug 2021 8:33 PM GMT)

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் நேற்று காலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது, அதில் சுமார் 25 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி நெல்லை மாவட்டம் தாழையூத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் அம்பேத்கார் நகரை சேர்ந்த நக்கீரன் (வயது 29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

Next Story