காவலர் பணிக்கு 2-வது நாளாக உடல்தகுதி தேர்வு: திருநங்கை உள்பட 221 பேர் தேர்ச்சி


காவலர் பணிக்கு 2-வது நாளாக உடல்தகுதி தேர்வு: திருநங்கை உள்பட 221 பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 5 Aug 2021 8:42 PM GMT (Updated: 5 Aug 2021 8:42 PM GMT)

சேலத்தில் காவலர்கள் பணிக்கு நேற்று 2-வது நாளாக நடந்த உடல்தகுதி தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை உள்பட 221 பேர் தேர்ச்சி பெற்றனர்.

சேலம்
பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 913 பேர் தேர்ச்சி பெற்றனர்.
முதற்கட்டமாக ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த வாரம் நடந்தது. இதில் 1,812 பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 182 பெண்கள் தேர்ச்சி பெற்றனர்.
திருநங்கை பங்கேற்பு
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று உடல் தகுதி தேர்வில் பங்கேற்பதற்காக திருநங்கை ஒருவர் உள்பட 465 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ரூபா (23) என்ற திருநங்கை உள்பட 316 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் அளவீடுதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடந்தது. இதில் திருநங்கை ரூபா உள்பட 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
அரசு வேலை
இது குறித்து திருநங்கை ரூபா கூறும் போது, அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று தனது தாய் என்னை ஊக்கப்படுத்தி கொண்டிருப்பதால் இந்த பணிக்கு விண்ணப்பித்து வந்துள்ளேன். போலீசில் பணியாற்றும் திருநங்கைகளை முன் உதாரணமாக கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். நிச்சயம் அரசு பணிக்கு செல்வேன் என்றார்.

Next Story