சேலத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்' திட்டம் தொடக்கம் கலெக்டர்- எம்.எல்.ஏ. பங்கேற்பு


சேலத்தில் ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் கலெக்டர்- எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Aug 2021 8:42 PM GMT (Updated: 5 Aug 2021 8:42 PM GMT)

சேலத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்' திட்டம் தொடங்கப்பட்டது. கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

சேலம்
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சத்யா காலனியில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கன்னங்குறிச்சி பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கான புதிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
தனி வாகனம்
இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
இந்த திட்டம் மூலம் மோட்டாங்குறிச்சி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் 452 பேர் பயன் அடைவார்கள். மருத்துவ களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்துகள் வழங்குவார்கள். இதற்காக தனி வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.
முதுகு தண்டுவட செயல் இழந்தவர்கள், மூட்டு தேய்மானம், பக்கவாதம், தசைச்சிதைவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். சிறுநீரக செயல் இழந்தவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இந்த திட்டம் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தேசிய சுகாதார குழும இணை இயக்குனர் ஜெயலட்சுமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, கன்னங்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் குபேந்திரன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெயின்போ நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story