நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.12 லட்சம் நகைகள் அபேஸ் சேலத்தில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது


நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.12 லட்சம் நகைகள் அபேஸ் சேலத்தில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 6 Aug 2021 2:12 AM IST (Updated: 6 Aug 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் அபேஸ் செய்யப்பட்டது. சேலத்தில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது.

சேலம்
ஓய்வு பெற்ற ஆசிரியர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 73). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி பிரேமா (68). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் உள்ளனர். பாலசுப்பிரமணியன் தனது மனைவியுடன் சேலத்தில் உள்ள தன்னுடைய நண்பரின் 70-வது பிறந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்தார்.
அதற்காக பாலசுப்பிரமணியன் தன்னுடைய மனைவியுடன் நேற்று முன்தினம் தேவகோட்டையில் இருந்து பஸ் மூலம் சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு வந்தார். பின்னர் சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தனர். பின்னர் தனியார் பஸ்சில் ஏறி பட்டைக்கோவில் அருகே வைஷ்னவ சபா மஹால் அருகில் இறங்கினர். இதையடுத்து பிறந்த நாள் விழா நடக்கும் மஹாலுக்கு சென்றனர்.
நகைகள் அபேஸ்
அப்போது தான் கொண்டு வந்த நகைகளை பிரேமா அணிய விரும்பினார். இதற்காக அவர் நகைகள் கொண்டு வந்த பேக்கை பார்த்தார். ஆனால் நகைகள் இருந்த பேக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமா இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். பஸ்சில் வந்த போது நகைகள் இருந்த பேக்கை மர்ம நபர் அபேஸ் செய்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.
இந்த பேக்கில் 16 பவுன் தங்க, வைர நகைகள், ரூ.2,500 மற்றும் ஒரு செல்போன் ஆகியவை இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இதுகுறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பாலசுப்பிரமணியன் வந்த டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் இந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதுதவிர நகைகளை அபேஸ் செய்த மர்ம நபர்களை விரைவில் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நகை பறிக்கும் கும்பலின் பட்டியலை தனிப்படையினர் தயார் செய்து அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story