பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இந்து அமைப்பினர் போராட்டம்


பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இந்து அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:53 PM GMT (Updated: 2021-08-06T02:23:23+05:30)

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட் வளாகம் இடிக்கப்பட்டு, புதுப்பித்து கட்டப்பட உள்ளது. இதையொட்டி அங்கிருந்த காய்கறி கடைகள் அனைத்தும், அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்துக்கு மாற்றப்பட்டது. 

மேலும் அங்குள்ள பல்வேறு கடைக்காரர்களுக்கு, அருகில் உள்ள ஜவஹர் திடலில் தற்காலிக கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் மார்க்கெட் திடலில் தற்காலிக கடைகள் அமைக்க தளவாட சாமான்களை கொண்டு வந்து போட்டனர்.

இதை அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் அந்த அமைப்பினர் நேற்று மார்க்கெட் திடலில் திரண்டனர். இதேபோல் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார், வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்ரின் பீர்முகமது, லோடு ஆட்டோ உரிமையாளர்கள் சங்கம் சுப்பிரமணியன் உள்பட பல்வேறு அமைப்பினர், அங்கு அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டை பகுதியில் தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது பாளைங்கோட்டையில் உள்ள 12 அம்மன் கோவில்களின் சப்பரம் மார்க்கெட் திடலில் பக்தர்கள் தரிசனத்துக்காக நிறுத்தி வைக்கப்படும். எனவே இந்த திடலை காலி இடமாக மட்டுமே பராமரிக்க வேண்டும். தற்காலிக கடைகள் அமைக்க கூடாது’’ என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் தரப்பில், மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளருடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். அதுவரை பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story